நான் உங்களிடத்தில் அச்சம் தவிர் என்ற பாரதியார் கூற்றை உரையாடப் போகின்றேன்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் நெற்றிச்சூடியாய் இடம் பிடித்த தொடர் அச்சம் தவிர் என்பதே. அடிமைதனமும் அச்சமும் உச்சத்தில் கொண்டோரை
ஊமைச்சனங்களென உரத்துக் கூறியவர் நம் பாரதி.
நாம் எதற்கு பயப்பட வேண்டுமோ அதற்கு மட்டும் தான் பயப்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் பயந்தால் கோழை என தூற்றுவர்.
தீயவர்கள் கண்டு ஒதுங்குவது கோழைதனம் அல்ல ஆனால் தீயன கண்டு அச்சம் கொள்ளுதல் தகாது.
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடதே - நீ வெம்பி விடதே!
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
சிறுவயதிலிருந்தே அச்சம் இல்லாமல் வாழக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். அவர்களின் அதீத எண்ணக் குதிரைகளுக்குக் கடிவாளம் ஆரம்பத்திலேயே போட்டுவிட்டால் அவர்கள் எப்படி சிறந்த சிந்தனையாளர்களாக வருவார்கள் என்பது பட்டுக்கோட்டை கூற்று.
எப்போது பயப்படலாம்?
போரின்போது நான்கு போர்வீரர்கள் குறுகிய பாதை வழியாக செல்லும்போது தாக்கப்பட்டனர். நால்வரும் அருகில் இருந்த பள்ளத்தில் பதுங்கினார்கள். பிறகு வாகனத்தை வந்த வழியில் திருப்பிச் செல்ல முயற்சித்தனர்.
ஆனால் பாதை குறுகலாக இருந்ததால் வண்டியை திருப்ப முடியவில்லை. தொடர்ந்து பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயம் அவர்களை யோசிக்க வைத்தது. உடனே அவர்கள் நால்வரும் ஜிப்பின் ஒவ்வொரு சக்கரத்தை தோள் கொடுத்து தூக்கி வண்டியை திருப்பி நிறுத்தி ஏறி தப்பிச் சென்றனர்.
சாதாரண சூழலில் காரை நகர்த்தவே சிரமப்படுவார்கள். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு பயம் ஏற்படுத்தும் அவசர உணர்வால் பாதுகாப்பிற்காக உடல் வலிமை எவ்வளவு தூரம் அதிகரிக்கின்றது என்பதை அனுபவ பூர்வமாக போர்வீரர்களால் உணர முடிந்தது.
படிக்கும் மாணவ, மாணவியருக்கு தேர்வு பயம் தோன்றுகிறது. தேர்வில் தோல்வி அடையக் கூடாது என்ற பயம் வரும்போதுதான் வெற்றி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்கின்றார்கள்.
ஏற்கும் அளவில் பயத்தை உணரும்போது, அன்றாட வாழ்வில் ஆக்க பூர்வமாக பொறுப்புடனும், விழிப்புணர்ச்சியுடனும் செயல்பட முடிகின்றது.
பயத்தின் காரணமாக அல்லது பிறர் ஏதும் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு முறையும் முடிவெடுத்து செயல்பட்டால் நாளடைவில் பயம் என்பது அதிகரிக்க ஆரம்பித்துவிடும். அது உடல்நலம், மன நலம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
அவரவர் ஆற்ற வேண்டிய கடமைகளையும், செயல்பாடுகளையும் புரிந்து கொண்டு அன்பின் அடிப்படையில் செயல்பட்டால் பயமின்றி, முழுமையான கவனத்துடன் சிறப்பாக செயல்பட முடியும். அகமலர்ச்சியின் விளைவாக அனைத்து செயல்பாடுகளுமே பய உணர்வு இல்லாத செயலாக மாறும். காந்தியடிகள் மகாத்மாவாக மாறியது. அவர் மனசாட்சி வழி செயல்பட்டதால்தான்.
ஆதலினல் தேவையில்லாத அச்சம் தவிர்ப்பீர்.
நன்றி ! வணக்கம்!
Super speak
ReplyDelete