Wednesday, March 23, 2011

குருவி கொடுத்த விதை

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.
அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.
பண்ணையாரிடம் வந்த அவன், " ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்" என்றான்.
" என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்" என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோகத்துடன் வீடு திரும்பினான் அவன். தன் மனைவியிடம், " நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி" என்று வருத்தத்துடன் கூறினான்.
அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது.
இதைப் பார்த்த அவன் மனைவி " நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்" என்று கணவனிடம் சொன்னாள்.
" பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்" என்றான் அவன்.
கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.
திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.
அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.
அதை அன்போடு எடுத்தான் அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான்.
சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.
" இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?" என்றாள் மனைவி.
அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன்.
அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. " இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.
மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது. " இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு" என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது " இதை சன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி" என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான் அவன்.
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன்.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான்.
என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசனிக் காய் ஆனது.
மகிழ்ச்சி அடைந்த அவன், " இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை" என்றான்.
" வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்" என்றாள் மனைவி.
அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக் கொண்டு வந்தான் அவன். கத்தியால் அதை வெட்டினான். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.
சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து வெட்டினான். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.
அதன் பிறகு அவனும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள்.
உழவன் சில நாள்களில் பெருஞ்செல்வனானதை அறிந்தார் பண்ணையார்.
அவனிடம் வந்த அவர், " டேய்! முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்" என்று கேட்டார்.
அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான்.
தன் மாளிகைக்கு வந்தார் அவர். எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அவரும் அதில் தங்கும் என்று எதிர்பார்த்தார்.
அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.
" பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார். மூன்று குஞ்சுகளை அடித்துக் கொன்றார். ஒன்றன் காலை உடைத்துக் கீழே எறிந்தார்.
பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்தார். வேளை தவறாமல் உணவு அளித்தார்.
கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது.
" மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட செல்வன் ஆவேன்" என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.
அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. " ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு" என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது.
எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார்.
மறுநாளே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை வெட்டினார்.
அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன.
வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார்.
அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அவரையும் அந்த மாளிகையையும் ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது.
கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.
மூன்றாவது பூசனிக்காயை உடைக்க யாருமே முன்வரவில்லை. அதற்குள் பாம்பு, தேள், பூரான் போன்ற எண்ணற்றவை இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.

யானை பல் விளக்குமா?

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.
"ஏண்டா இன்னைக்கு குளிச்சியா" என்றாள் அப்புவின் அம்மா.
"நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.
வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.
அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார்.
"ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?" என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.
"மறந்திட்டேன் சார்" சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.
அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், "யானை பல் விளக்குகிறதா" என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.
அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.
அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.
ஆனால் பையன்கள் இவனை "அழுக்குமாமா" என்று அழைத்தனர்.
அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
"டேய் குளிச்சிட்டுப் போய் படிடா" இது அப்புவின் அம்மா.
"குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா" என்பான் அப்பு.
பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.
மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.
அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.
விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.
அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
"பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து" என்றார் டாக்டர்.
அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.
"தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது" என்றார் டாக்டர்.
அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.
அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.
அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. "முதல் மார்க் ரங்கராஜன்" என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.
ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.
"சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்" என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.
அடுத்தநாள் அவன் பள்ளிக்கு "பளிச்" என்று வந்தான்.
"அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா" என்று ஒருவன் சொல்ல பையன் "கொல்" லென்று சிரித்தனர்.
அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

Tuesday, March 22, 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


ஒரு காட்டில் காளைமாடு, சேவல், பன்றி, பூனை ,செம்மறியாடு ஆகிய ஐந்தும் ஒன்றாக வீடு கட்டி வாழ்ந்து வந்தன. இவைகள் ஒன்றுக்குகொன்று ஒற்றுமையாக இருந்தன. அந்தக் காட்டில் இருந்த நரி சேவலைப் பிடித்துத்தின்ன நீண்ட நாற்களாக திட்டமிட்டு வந்தது. அதே காட்டில் ஓர் ஓநாயும் இருந்தது. ஓநாயுக்கு செம்மறி ஆட்டைப் பிடித்துத் தின்னும் ஆசை இருந்தது.
           
 ஒரு நாள் ஓநாயும் நரியும் சந்தித்தன.இருவரும் தமது விருப்பங்களை ஒருவருக்கு ஒருவர் தெரிவித்தனர். சமயம் பார்த்து ஓநாயும் நரியும் கரடியொன்றைக் கூட அழைத்துக் கொண்டு , காளைமாடு,சேவல். பன்றி, பூனை. செம்மறியாடு போன்றவை வசிக்கும் வீட்டுக்கு புறப்பட்டன. வீட்டிற்க்கு அருகில் வந்ததும் நரி ஓநாயையும் கரடியையும் பார்த்து நான் முதலில் உள்ளே போகிறேன், போய்  சேவயைப் பிடித்தவுடன் குரல் கொடுப்பேன் நீங்கள் ஒவ்வருவராக உள்ளே வாருங்கள் என்றது ஓநாயும் கரடியும் அதற்க்கு சம்மதித்து வெளியே காத்திருக்க நரி உள்ளே சென்றது. 

              இவற்றைலெல்லாம் வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்திருந்த சேவல் அவதானித்தது. இதையெல்லாம் நண்பர்களிடம் சொல்லி எச்சரித்தது. கதவை திறந்து கொண்டு நரி உள்ளே போனபோது காளைமாடு வந்து முட்டித்தள்ளியது நரி நிலை குலைந்து கீழே விழ பூனையும் சேவலும் நரியைத் தாக்கத்தொடங்கின. வெளியே காத்திருந்த ஓநாய் கரடியைப் பார்த்து உள்ளே போன நரி சேவலைத்தின்று மயங்கிக்கிடக்கிறது போலும் நான் உள்ளே போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று உள்ளே போனது.
   
       ஓநாய் உள்ளே நுழைந்தது தான் தாமதம் காளை மாடு அதை மோதித்தள்ளியது. ஓநாய் கீழே விழுந்தது பன்றியும் செம்மறியாடும் ஓநாயின் மேல் ஏறித்தாக்கின. வெளியே காத்திருந்த கரடி பொறுமை இழந்தது.இருவரும் உள்ளே என்ன? செய்கிறார்கள் என்று நினைத்தபடி கடகடவென உள்ளே வந்தது.வாசலுக்கு வந்ததுதான் தாமதம் காளைமாடு சற்றுப் பின்னே போய் ஒரே பாச்சலாக வந்து மோதியது. கரடி ஒவெனக் கத்தியபடி தூரத்தில் போய் விழுந்தது.

           வீட்டுக்குள் அகப்பட்ட ஓநாயும் நரியும் எப்படியோ வெளியே வந்து தப்பினோம் பிழத்தோம் என்று ஒரேஓட்டமாக ஓடித்தப்பின. காளைமாடு, சேவல், பன்றி, பூனை ,செம்மறியாடு எல்லாம் ஒன்றாக ஒற்றுமையாக இருந்தபடியால் தங்களைக் கொல்லாவந்த எதிரிகளை அடித்துத்துரத்திவிட்டன.



ஆம் தமிழர்களே! நாம் எந்தக் காரியத்தையும்  ஒற்றுமையுடன் செய்வேமாயின்  எம்மை வெல்ல இவ்வுலகில்  யாருமில்லை.தமிழர் என்று சொல்லி நாம்     ஒன்றுபடுவேம்.

முட்டாளும் புத்திசாலியும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.

'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.

'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.

'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.

'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.

கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.

அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

Friday, March 11, 2011

எண்ணுவது உயர்வு - கதை

எண்ணுவது உயர்வு - கதை
உயர்வான எண்ணங்களோடு எப்போதும் இருக்க வேண்டும்.

மலையடிவாரத்தில் காகமும், புறாவும் நெடுநாட்களாக தவம் செய்து கொண்டிருந்தன.அவைகளைப் பார்த்த இறைவன் மனம் இரங்கினார். அந்த மலையடிவாரத்தில் காட்சியளித்தார்.இறைவனை தங்கள் கண் முன்னே கண்டதும் புறாவும், காகமும் மகிழ்ச்சியடைந்தன.பறவைகளே உங்கள் தவத்தைக் கண்டு என்மனம் இரங்கிவிட்டது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்.உடனே காகம் இறைவா எனது கருமை நிறம் மாறி என்உடல் பொன்னிறமாக மாற வேண்டும். என் பொன்நிற இறக்கைகளைப் பார்த்து எல்லோரும் பொறாமைப் படவேண்டும். அதனைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும். என்று கூறியது.இறைவன் உடனே புறாவைப் பார்த்தார் புறாவும் இறைவா இந்த உலகில் இப்போது எல்லா உயிர்களுக்குமே கருணையுள்ளம் குறைந்து வருகிறது.அன்பும் இல்லாமல் இரக்கமும் இல்லாமல் பல கொடிய வழிகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான மனப்போக்கெல்லாம் அவர்களை விட்டு மறையவேண்டும். எல்லா நாடுகளும் செழித்து எல்லாமக்களும் நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றது.இறைவன் புறாவை வியப்போடு பார்த்தார்.புறாவே உனது நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய வேண்டுகோளை என்னால் நிறைவேற்ற முடியாது. இந்த உலகில் எல்லா உயிரினங்களுக்கும் அவர்கள் எண்ணப்படியே வாழ்க்கையமைகிறது நல்ல எண்ணத்தை உடையவர்கள் நலமடைவார்கள். தீய எண்ணத்தை உடையவர்கள் துன்பமடைவார்கள். அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில்தான் உள்ளது. நீ நல்லெண்ணம் உடையதாக இருக்கின்றாய். எனவே உனக்கு எந்த துன்பமும் ஏற்படாதவாறு நலமாக வாழ வரமளிக்கிறேன் என்று கூறியவாறு காகத்தைப் பார்த்தார்.காகமே உனக்கும் உனது எண்ணப்படியே வரம் தந்தேன். இருவரும் மகிழ்ச்சியாகச் செல்லுங்கள் என்று கூறி மறைந்தார்.காகத்தின் இறக்கைகள் எல்லாம் உடனே பொன்நிறமாக மாறிவிட்டது. அதனைப் பார்த்து காகம் மட்டற்ற மகிழ்சியடைந்தது.புறாவிடம் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு பறந்து சென்றது.புறா உற்சாகமடைந்தது. மகிழ்ச்சியோடு அந்த இடத்தைவிட்டு பறந்து சென்றது. புறாவைக் கண்ட மற்ற பறவைகள் எல்லாம் அதனிடம் ஏதோ ஓர் சக்தி இருப்பதாக உணர்ந்தன. புறாவைக்கண்டு வணங்குகின்றன. புறாவும் அந்தப் பறவைகளுக்கெல்லாம் நல் அறிவுரைகளை எடுத்துக் கூறியது. புறா சென்ற இடமெல்லாம் அதற்கு சுவையான உணவு வகைகள் கிடைத்தன. புறாவும் மிகவும் மகிழ்ச்சியோடு அதனை மற்ற பறவைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தது.பொன்னிறமாக மாறிய காகத்தை வேடன் பார்த்தான். உடனே அந்த காகத்தை அம்பால் எய்து பிடித்துச் சென்றான்.வேடன் பிடியில் சிக்கிய காகம் அப்போதுதான் தன் தவறை உணர்ந்தது. எனது கீழ் தரமான எண்ணத்தால் பேராசை பிடித்து இறைவனின் வரத்தை வீணாக்கிவிட்டேனே.. நானும் புறாவைப் போன்று நல்லெண்ணத்தோடு வரம் கேட்டிருந்தால் இந்த துன்பம் நேர்ந்திருக்காதே இறைவன் சொன்னது உண்மைதான். ஒருவா¢ன் எண்ணப்படியே வாழ்க்கை அமைகிறது. உயர்வான எண்ணம் உடையோர் உயர்ந்த வாழ்க்கையை அடையலாம். தாழ்வான எண்ணம் உடையோர் தாழ்ந்த வாழ்க்கையை அடையலாம் என்பதை இப்போது பு¡¢ந்து கொண்டேன் என்று தனக்குள் கூறியபடி மனம் வருந்தியது.எண்ணத்தால் வாழ்க்கை அமைவதால். நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு வாழ வேண்டும்

சிலம்பாட்டம்

சிலம்பாட்டம்

கதிரவன் வெப்பத்துடன் மேகங்கள் பின் மறைந்து கொண்டான். சிறிது நேரத்தில் ‘சில் சில்’ என்று காற்று வீசியது. இயற்கை தாய் தன் அன்பு செல்வங்களை அனைத்து மகிழ்ந்தாள். அங்கிருந்த மரங்கள் காற்றுக்கு நடனம் ஆடின. அப்போது ரவி அங்கே இயற்கையை ரசித்து நடந்து கொண்டிருந்தான். அங்கே இருந்த சிலம்பாட்ட சுவரோட்டி அவன் கண்களை இழுத்தது. அதை படித்ததும் அவன் உச்சி குளிர்ந்தான். அவனுக்கு எப்போதும் சிலம்பாட்டத்தில் ஆர்வம் அதிகம்.
மின்னல் தோற்க ரவி வீட்டிற்கு ஓடினான். சிலம்பாட்ட வகுப்பை பற்றி தன் பெற்றோரிடம் கூறிவிட்டு, அதில் படிக்க தனக்கு ஆசை என்று கூறினான். அவனின் பெற்றோரும், அவன் ஆர்வமறிந்து சிலம்பாட்ட வகுப்பில் சேர்த்து விட்டார்கள். சில மாதங்களில், ரவியின் சிலம்பாட்டத்தேர்வும் வந்தது. அதில் மிகவும் நன்றாக செய்து, வகுப்பில் முதலாக வந்தான். ஆசிரியர் அவனை பாராட்டி சான்றிதழை கொடுத்தார். ரவிக்கு அப்போது கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சி. அவன் மனம் சாதனையில் பூரித்தது.
அன்று சான்றிதழை கொடுக்கும் விழா சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. அன்றிரவு,  நிலவு தன் ஒளி கற்றைகளை, இலை, செடி கொடிகளை தாண்டி தன் படைபரிவாரங்களான நட்சத்திரங்களுடன் காரிருள் மேகத்தினூடே பள பள வென்று ஜொலித்தது. இருந்தாலும் தெரு இருளோடி இருந்தது, திடிரென, அவ்விருளை கிழித்து கொண்டு ஒரு பயமுறுத்தும் குரல் ரவியை மிரட்டியது. ரவியின் பணப்பையை பறிக்க முயன்றது. கையில் கத்தியோடு வந்த உருவத்தை பார்த்த ரவியின் உள்ளம் ஒருகணம் திடுக்கிட்டது. மறுகணம், ரவிக்கு ஆசிரியர் அவனுக்கு கற்பித்த பாடம் நினைவுக்கு வந்தது. தைரியமாக, மர்ம உருவம் தன் முன் நீட்டிய, கத்தியை தட்டி விட்டு, சிலம்ப பயிற்சியில் கற்ற தற்காப்புகலையை செயல்படுத்தினான். இதை எதிர்பர்க்காத திருடன் அச்சம் அடைந்து அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான். தற்காப்பு கலை எவ்வளவு முக்கியம் என்பதை கண்கூடாக உணர்ந்த ரவி மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு நடை போட்டான்.

அச்சம் தவிர்

நான் உங்களிடத்தில் அச்சம் தவிர் என்ற பாரதியார் கூற்றை உரையாடப் போகின்றேன்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் நெற்றிச்சூடியாய் இடம் பிடித்த தொடர் அச்சம் தவிர் என்பதே. அடிமைதனமும் அச்சமும் உச்சத்தில் கொண்டோரை
ஊமைச்சனங்களென உரத்துக் கூறியவர் நம் பாரதி.
நாம் எதற்கு பயப்பட வேண்டுமோ அதற்கு மட்டும் தான் பயப்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் பயந்தால் கோழை என தூற்றுவர்.
தீயவர்கள் கண்டு ஒதுங்குவது கோழைதனம் அல்ல ஆனால் தீயன கண்டு அச்சம் கொள்ளுதல் தகாது.
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே  கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடதே - நீ வெம்பி விடதே!
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
சிறுவயதிலிருந்தே அச்சம் இல்லாமல் வாழக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். அவர்களின் அதீத எண்ணக் குதிரைகளுக்குக் கடிவாளம் ஆரம்பத்திலேயே போட்டுவிட்டால் அவர்கள் எப்படி சிறந்த சிந்தனையாளர்களாக வருவார்கள் என்பது பட்டுக்கோட்டை கூற்று.

எப்போது பயப்படலாம்?
போரின்போது நான்கு போர்வீரர்கள் குறுகிய பாதை வழியாக செல்லும்போது தாக்கப்பட்டனர். நால்வரும் அருகில் இருந்த பள்ளத்தில் பதுங்கினார்கள். பிறகு வாகனத்தை வந்த வழியில் திருப்பிச் செல்ல முயற்சித்தனர்.
ஆனால் பாதை குறுகலாக இருந்ததால் வண்டியை திருப்ப முடியவில்லை. தொடர்ந்து பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயம் அவர்களை யோசிக்க வைத்தது. உடனே அவர்கள் நால்வரும் ஜிப்பின் ஒவ்வொரு சக்கரத்தை தோள் கொடுத்து தூக்கி வண்டியை திருப்பி நிறுத்தி ஏறி தப்பிச் சென்றனர்.
சாதாரண சூழலில் காரை நகர்த்தவே சிரமப்படுவார்கள். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு பயம் ஏற்படுத்தும் அவசர உணர்வால் பாதுகாப்பிற்காக உடல் வலிமை எவ்வளவு தூரம் அதிகரிக்கின்றது என்பதை அனுபவ பூர்வமாக போர்வீரர்களால் உணர முடிந்தது.
படிக்கும் மாணவ, மாணவியருக்கு தேர்வு பயம் தோன்றுகிறது. தேர்வில் தோல்வி அடையக் கூடாது என்ற பயம் வரும்போதுதான் வெற்றி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்கின்றார்கள்.
ஏற்கும் அளவில் பயத்தை உணரும்போது, அன்றாட வாழ்வில் ஆக்க பூர்வமாக பொறுப்புடனும், விழிப்புணர்ச்சியுடனும் செயல்பட முடிகின்றது.
பயத்தின் காரணமாக அல்லது பிறர் ஏதும் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு முறையும் முடிவெடுத்து செயல்பட்டால் நாளடைவில் பயம் என்பது அதிகரிக்க ஆரம்பித்துவிடும். அது உடல்நலம், மன நலம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
அவரவர் ஆற்ற வேண்டிய கடமைகளையும், செயல்பாடுகளையும் புரிந்து கொண்டு அன்பின் அடிப்படையில் செயல்பட்டால் பயமின்றி, முழுமையான கவனத்துடன் சிறப்பாக செயல்பட முடியும். அகமலர்ச்சியின் விளைவாக அனைத்து செயல்பாடுகளுமே பய உணர்வு இல்லாத செயலாக மாறும். காந்தியடிகள் மகாத்மாவாக மாறியது. அவர் மனசாட்சி வழி செயல்பட்டதால்தான்.

ஆதலினல் தேவையில்லாத அச்சம் தவிர்ப்பீர்.
நன்றி ! வணக்கம்!